திருவண்ணாமலை அடுத்த சின்னபாலிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். இவர் செங்கல் சூளை மற்றும் லாரி வைத்திருந்தார். மேலும், விவசாயமும் செய்து வந்தார். இவர் விவசாய பணிக்காக கோட்டங்கள் கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவரிடம் கந்துவட்டிக்கு சில வருடங்களுக்கு முன்பு ரூ. ஒரு லட்சம் பணம் வாங்கியுள்ளார்.
மாதந்தோறும் ரூ. 15,000 வீதம் கட்டிவந்த நிலையில், கடன் வாங்கிய தொகையை விட கூடுதல் தொகை கட்டியுள்ளார். அனால் மேலும், பணம் கேட்டு வடிவேலு தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமஜெயத்துக்கு சொந்தமான பாகப்பிரிவினையில் வந்த 0.95 சென்ட் வீட்டுடன் கூடிய நிலத்தை வடிவேலு தனது மகன் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
கந்துவட்டி கொடுமையால் தற்கொலை
இதனால் மனமுடைந்த ராமஜெயம், நேற்று (ஜூன் 21) மாலை விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் வடிவேலுவை கைது செய்ய கோரி சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பினனர் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் ராமஜெயத்தின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு: போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்'