தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை கண்டறிந்து குடியரசு தின விழாவில் முதலமைச்சர் விருது வழங்குவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு சிறந்த காவல் நிலையத்தை தேர்ந்தெடுக்க டிஜிபி தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், முதற்கட்ட ஆய்வில் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில், திருவண்ணாமலை நகர காவல் நிலையம் நான்காம் இடத்தை பிடித்தது. இதையடுத்து இறுதி கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சிறந்த மூன்று காவல் நிலையங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டன. இதில் இரண்டாவது இடத்தில் திருவண்ணாமலை நகர காவல் நிலையம் இடம் பெற்றுள்ளது.
கோப்புகள் பராமரிப்பு, வழக்கை விரைந்து முடித்தல், சிறப்பான பாதுகாப்பு, பொதுமக்களுடன் நல்லுறவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சிறப்பான புலன்விசாரணை போன்றவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டு மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில், 1418.5 புள்ளிகள் பெற்று திருவண்ணாமலை நகர காவல் நிலையம் இரண்டாம் இடத்தை பெற்றது. தேர்வு செய்யப்பட்ட சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் நிலைய அலுவலர்களுக்கு குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முதலமைச்சர் வழங்குவார். முதல் முறையாக சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை திருவண்ணாமலை நகர காவல் நிலையம் பெற்றுள்ளது.