திருவண்ணாமலை மாவட்டம், தர்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைமணி (46). இவர் தூசி அருகேயுள்ள புதுப்பாளையம் கூட்டுச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்து இருசக்கர வாகனம், 500 ரூபாய் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர் இது குறித்து அவர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பச்சைமணியிடம் இருந்து வழிப்பறிச் செய்ததையும், வழிப்பறிச் செய்வதை தொழிலாக வைத்திருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் ஒரு ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சின்னியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா (49) என்பவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை தானிப்பாடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்கண்ட மூன்று நபர்களின் மீதும் குண்டர்ச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி பரிந்துரை செய்தார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 26 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போதைப் பொருள் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது!