ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இன்றுமுதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அண்டை மாநில எல்லையோர பகுதிகளில் வசிக்கும் தமிழ்நாட்டு மது பிரியர்கள் அங்கு சென்று மது வாங்கிவருகின்றனர்.
அதேபோல் பெங்களூரில் 40 நாள்களுக்குப் பிறகு மதுக்கடை திறக்கப்பட்டதால், திருவண்ணாமலையை சேர்ந்த இரு அரசு மருத்துவர்கள் பெங்களூரு சென்று மது வாங்கிக்கொண்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் செங்கம் அடுத்த கரியமங்கலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை அருகே உள்ள குப்பைத் தொட்டியின் மீது மோதி நிலைதடுமாறி செய்யாற்றின் அருகே இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காரில் பயணம் செய்த மருத்துவர்கள் இருவரும் எவ்வித காயங்களின்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துறையினர் காருடன் இருவரையும் மீட்டு, பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க...திறக்கப்பட்ட கடைகளை மூடிய நெல்லை மாநகராட்சி!