திருவனந்தபுரம்: பெண் ஊழியர்களுக்கு பணியிட பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கேரள மாநில அரசு தமது பெவ்கோ நிறுவன பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி திட்டத்தை நடத்தவுள்ளது.
கேரளாவில் மது விற்பனைக்காக பெவ்கொ என்கிற அரசு நிறுவனம் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு தற்போது வரை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இந்த நிறுவனத்தில் பெண் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 50 சதவீத பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், நிறுவனம் தொடங்கி 40 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெவ்கோ நிறுவனத்திற்கு பெண் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்ஷிதா அட்டல்லுரி தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனைக்குள் புகுந்த சைக்கோ கணவன்.. மனைவி, மகள்களை அடித்து கொலை.. அருணாச்சல் அதிர்ச்சி.!
இந்த நிலையில், இந்நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பணியாற்றி வருகின்றனர். பணி நேரங்களில் இவர்கள் பெரும்பாலும் மது போதையில் இருக்கும் வாடிக்கையாளர்களை சந்திப்பதால் சில நேரங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றனர். அது மட்டுமின்றி பணி முடிந்து வெளியே செல்லும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. இதனால் பெவ்கோ நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு தற்காத்துக்கொள்ளும் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.
பெவ்கோ நிறுவனத்தின் அதிகாரியான ஹர்ஷிதா அட்டல்லுரி ஐபிஎஸ் தலைமையில் இந்த பயிற்சி டிசம்பர் 1 முதல் 18 வரை நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த பயிற்சியில், எதிரியிடம் இருந்து வரும் தாக்குதலை எவ்வாறு தடுத்து பதிலடி கொடுப்பது, அச்சமின்றி சவாலை எதிர்கொள்ளும் உத்திகள் ஆகியவை கற்றுத்தரப்படும்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசியுள்ள ஹர்ஷிதா அட்டல்லுரி, "பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் திறம்பட பதிலளிக்கத் தயார்படுத்துவதே இதன் நோக்கம்" என்று கூறினார்.
மேலும், கேரள காவல்துறையின் மகளிர் தற்காப்புப் பயிற்சிக் குழுவினரால் நடத்தப்படும் இந்த பயிற்சியை, திருவனந்தபுரம் சரக டிஐஜி அஜிதா பேகம், மகளிர் பிரிவு ஏஐஜி பாஸ்டின் சாபு ஆகியோர் மேற்பார்வையிடுகின்றனர். இந்த பயிற்சிக்கு அனைத்து பெண் ஊழியர்களுக்கும் கட்டாயம் வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளும் இதில் கலந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்