சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று (நவ.14) சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர், சிறப்புக் குழந்தைகள் குறித்து அரசுக்கும், சமூகத்திற்கும் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும், இந்தியாவில் சிறப்புக் குழந்தைகள் எண்ணிக்கை 50 லட்சம் ஆக உள்ளதாகவும், சிறப்புக் குழந்தைகளுக்கு திறமைகள் நிறைய உள்ளன. எனவே, அவர்கள் தேவையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஆளுநரின் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் இளம் சாதனையாளர்களுடன் தொடர்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதில் ஏராளமான சிறப்புக் குழந்தைகள் மற்றும் சாதனை குழந்தைகள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "சிறப்புக் குழந்தைகள் பற்றி அரசுக்கும், சமூகத்திற்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. சிறப்புக் குழந்தைகள் அப்பாவித் தனமானவர்கள். அவர்களிடம் பல திறமைகள் உள்ளன. அவர்களது தேவையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவில் சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 50 லட்சமாக உள்ளது. சிறப்புக் குழந்தைகளை குடும்பத்தினரே நிராகரிக்கும் நிலை உள்ளது, அவ்வாறு செய்யக்கூடாது.
அவர்கள் மிகவும் சிறந்த குழந்தைகள். அவர்களுக்கு ஏராளமான தனித் திறமைகள் உள்ளன. அதைக் கண்டறிந்து அந்த குழந்தைகளை அந்த துறையில் ஊக்குவிக்க வேண்டும். அதுவும் சிறப்புக் குழந்தைகள் மிகவும் அன்பானவர்கள். அனைவர் மீதும் அன்பும், பாசமும் செலுத்தக்கூடியவர்கள். பல்வேறு துறையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இதையும் படிங்க: 19,000 புதிய ஆசிரியர்கள் பணி நியமனம்.. அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்!
மென்மேலும் பல வெற்றிகளைப் பெற்று, விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் உறங்க சென்று காலையில் விழிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது சமூக ஊடகங்கள், செல்போன் போன்றவற்றால் மாணவர்களுக்கு கவன சிதறல்கள் ஏற்படுகிறது. அதைத்தவிர்க்க அத்தியாவசிய தேவை இல்லாமல், செல்போன் சமூக ஊடகங்களை பயன்படுத்த வேண்டாம்.
மாணவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைத்தால் தாங்கள் நினைத்த இலக்கை அடைய முடியும். மாணவர்கள் பெரிய அளவில் கனவு கண்டு, அந்த கனவை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைக்கும் பொழுது வெற்றி தன் வசப்படும். சிறிய கனவு காணாதீர்கள்.. பெரிய கனவாய் காணுங்கள். அத்துடன் மாணவர்களுக்கு சுய ஒழுக்கமும் முக்கியம் என பேசினார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என் ரவி அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் சிலர், கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, ஆளுநர் பதிலளித்தார்.
ரோல் மாடல் யார்?: என் தாய் தான் எனக்கு ரோல் மாடல். மேலும், என் தாய் கடுமையாக உழைத்து எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கினார். எனவே என்னுடைய தாய் தான் என்னுடைய ரோல் மாடல். நான் கிராமத்தில் பிறந்து மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து வளர்ந்தேன். எனது வாழ்வில் வறுமையையும் அனுபவித்து உள்ளேன் என்றார்.
ஆளுநர் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?: ஆளுநராவதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் அதிக சத்தம் போட்டுக் கொண்டிருந்ததால், உடன் வந்திருந்தவர்கள் அந்த மாணவனை வெளியே அனுப்ப முற்பட்டனர். அப்போது, ஆளுநர் அவரை வெளியே அனுப்பாதீர்கள். உள்ளே அமர வையுங்கள்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்