திருப்பத்தூர்: துபாயில் இருந்து 10% தள்ளுபடியில் தங்க நகை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் பகுதியை சேர்ந்த காலணி தொழிற்சாலை உரிமையளாரும், தொழிலதிபருமான கலீலூர் ரஹ்மான், என்பவரிடம் மார்ச் மாதம், பேர்ணாம்பட் பகுதியை சேர்ந்த தப்ரேஷ் அஹமது என்பவர் நகை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். துபாய் நாட்டில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் 10% தள்ளுபடியில் தங்க நகைகளை வாங்கி தருவதாக கூறி, 85 லட்சம் ரூபாயை பெற்று தலைமறைவாகியுள்ளார்.
அதன்பின், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கலீலூர் ரஹ்மான் இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் (மார்ச் 13) புகார் அளித்துள்ளார். அந்த புகார் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தப்ரேஸ் அஹமதுவைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கோவையில் போதை காளான் விற்பனை.. ஐந்து பேர் கைது..!
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தப்ரேஸ் அஹமது மீது ஏற்கனவே சென்னை சங்கர் நகர் காவல்நிலையத்தில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது என்பவர் ரூ.1 கோடி மோசடி செய்தாக புகார் அளித்துள்ளதும், அதேபோல் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அப்துல் ரகுமான் என்பவர் ரூ.52 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தப்ரேஸ் அஹமது அரசு அங்கீகரிக்கப்படாத டிரஸ்ட் ஒன்று நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. தற்போது தப்ரேஸ் அஹமதுவை வாணியம்பாடி நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்