திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தாவூத், மேல்புழுதியூரில் காலணி கடை நடத்தி வருகிறார். இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். வழக்கம்போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு மேல் புழுதியூரிலிருந்து செங்கம் நோக்கி பாலத்தை கடக்க முயன்ற போது, திருவண்ணாமலையில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற பிக்கப் வாகனம், நிலைதடுமாறி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் தந்தை, மகன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் உயிருக்குப் போராடிய இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்த இருவரையும் பரிசோதித்த மருத்துவர் பள்ளி மாணவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகவும், மாணவனின் தந்தை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள், மேடு பள்ளங்களுடன் காட்சியளிக்கும் சாலையில் முறையான பதாகைகள் ஏதும் வைக்காமல் அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலை துறை அலுவலர்களால் தான் தற்போது உயிர்பலி ஏற்பட்டிருப்பதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அரசு அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.