திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா ஆலியூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் (70) என்பவர், கடந்த ஜூன் 15ஆம் தேதி வழக்கம்போல் தனது நிலத்தில் ஆட்டுக்கு காவலாக படுத்துள்ளார்.
அப்போது, அவரை கொலை செய்துவிட்டு 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 38 ஆடுகளை திருடிச் சென்ற திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்கா கிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25), சமுத்திரம் ( 20), சிலம்பரசன் (19) ஆகிய மூன்று பேரை வடவணக்கம்பாடி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, குற்றவாளிகள் மூன்று பேரின் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி, மேற்கண்ட மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 70 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.