திருவண்ணாமலை மாவட்டம் வெரையூர் அடுத்த ஆருத்ராபட்டு கிராமத்தில் வசித்து வரும் விவசாயிகள் கார்த்திகேயன், ஜெயப்பிரகாஷ், வீரமணி. இவர்களது மகன்கள் தரணிதரன், விக்னேஸ்வரன், வீரன்.
தரணிதரன் நான்காம் வகுப்பும், விக்னேஸ்வரன் இரண்டாம் வகுப்பும், வீரன் எல்கேஜியும் படித்து வருகின்றனர். மூன்று சிறுவர்களும் இன்று அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர்.
சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில், மூவரும் ஏரியில் சென்று மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதியில் சிறுவர்கள் சென்றபோது நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர்.
வேலைக்கு சென்ற பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்த போது சிறுவர்கள் இல்லாதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் தேடினர். அப்போது ஏரியில் உடல்கள் மிதப்பதாகவந்த தகவலையடுத்து பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிறுவர்களின் உடலை கிராம மக்களின் உதவியுடன் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சிறுவர்களின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தென்காசியில் 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு