திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது கடந்த 29ஆம் தேதி மாலை ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 11 நாட்களாக மலைமீது மகா தீபம் பக்தர்களுக்கு காட்சியளித்தது.
தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தது.
மகா தீபத்தினை கோயில் ஊழியர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலை மீது தங்கியிருந்து தினமும் தீபம் ஏற்றும் பணியினை மேற்கொண்டு வந்தனர். மழையிலும் 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளித்த மகா தீபம் இன்றுடன் (டிசம்பர் 9) நிறைவடைந்தது.
மகா தீபம் நிறைவடைந்ததை தொடர்ந்து நாளை (டிசம்பர் 10) காலை, மலை உச்சியில் இருந்த மகா தீப கொப்பரை, அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, நடராஜருக்கு தீபமை அணிவிக்கப்படும். அதன்பின்னர் பக்தர்களுக்கு தீபமை வழங்கப்படும்.