தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதிமுதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக் கருதி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் படிப்படியாக குறைந்துவந்தாலும், நோய்ப்பரவல் முற்றிலும் குறையும்வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்றுவந்த மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் ரத்துசெய்யப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெட்டி மூலமாக ஆட்சியர் அலுவலகத்திலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெறப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்றுமுதல் (பிப். 01) திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்கள் நேரடியாகப் பெறப்படும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட ஆட்சியரகம் வரும் பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கோரிக்கை மனுக்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.