திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (36) என்பவருக்குச் சொந்தமான டாரஸ் லாரி நேற்று முன்தினம் (பிப். 3) இரவு ஆரணி அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்திவைத்திருந்தபோது நள்ளிரவில் லாரி திருடப்பட்டுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர் ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் லாரி சென்ற பகுதியை நோக்கி லாரி உரிமையாளர், உறவினர்கள் தேடிவந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அடுத்த சாமிநாதபுரம் பகுதியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான (எம்.வி. பாடி பில்டர்ஸ்) கடையில் லாரி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆம்பூர் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதின்பேரில், ஆம்பூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் எம்.எம். நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (36), அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (36) ஆகிய இருவரும் கள்ளச்சாவி போட்டு லாரியை கடத்திவந்தது தெரியவந்தது. அங்கிருந்த லாரியை மீட்ட காவல் துறையினர், லாரி கடத்தலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர் பிரகாஷை கைதுசெய்தனர்.
மேலும் தப்பியோடிய கோவிந்தராஜை வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் லாரி கடத்தலில் இன்னும் பல நபர்களுக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் சந்தேகிக்கும் காவல் துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் நகைக் கொள்ளை: குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை!