திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஏரியானது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியது.
இந்நிலையில் இன்று (மார்ச் 9) காலை அந்த ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்துள்ளது. இதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக மாவட்ட தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்துவந்த தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; பின் இது குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்த நபர் திருவண்ணாமலை புது வாணியம் குளத் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (28). இவர் சென்னை தனியார் நிறுவனத்தில் தணிக்கையாளராகப் பணிபுரிந்துவந்தார். மேலும் இவர் விடுமுறை நாள்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
தற்போது இரண்டு நாள்களுக்கு முன்பாக திருவண்ணாமலை வந்திருந்த அருண்குமார், கடந்த 7ஆம் தேதி மாலையிலிருந்து காணவில்லை என்று குடும்பத்தினர், உறவினர் வீட்டு மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். ஆனால் அருண்குமார் கிடைக்கவில்லையாம்.
இந்நிலையில்தான் மாவட்டஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வேங்கிக்கால் ஏரியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்போது காவல் துறையினர் இது கொலையா அல்லது தற்கொலையா? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கார், பைக் மோதி கோர விபத்து: ஒருவர் பலி, 8 பேர் படுகாயம்