சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதற்காக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகிய இரண்டு விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய பெரியார் சிலை அருகிலிருந்து நடந்து வந்தனர்.
அப்போது திடீரென இரண்டு விவசாயிகளும் தங்களது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நடந்து வந்தனர். இதனைக் கண்ட காவல்துறையினர், ஓடிச்சென்று அவர்கள் மீது ஆடைகளை போர்த்தி, அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய அய்யாக்கண்ணு, “உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்களை டெல்லிக்கு அழைத்து, விவசாயிகளுக்கு 3 - 5 லட்சம் வட்டி இல்லா கடன் 5 ஆண்டு காலத்திற்கு தருவதாகவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை இறக்குமதி செய்வதில்லை என்றும், இன்னும் பல உறுதிமொழிகளையும் அளித்தார். ஆனால், சொன்னது எதையுமே நிறைவேற்றவில்லை.
எனவே, விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை உருவி விட்டதால், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட, நிர்வாணமாக சென்று மனு தாக்கல் செய்ய வந்தோம். எங்களை கைது செய்துள்ளனர்” எனக் கூறினார்.
இதேபோல், பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடும் அரவக்குறிச்சி தொகுதியிலும், நேற்று அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நிர்வாணமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'உங்க பின்னாடியே வரணுமா' - கமலிடம் பெண் எழுப்பிய கேள்வி