திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை கிராமிய உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சித்ரா தலைமையில் தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவல் துறையினர் இணைந்து பீமாரப்பட்டி, மேல்திருவடத்தனூர் ஆகிய பகுதிகளில் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 260 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை வைத்திருந்த ஆனந்தன், ராஜீவ் காந்தி, கோபி, செல்வராஜ், கண்ணன், ஏழுமலை, ராமர், கோவிந்தன் ஆகிய எட்டு பேரும் தானிப்பாடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செங்கம் வட்டம் உச்சிமலை குப்பத்தில் செங்கம் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சின்ராஜ் தலைமையில் மேல்செங்கம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உச்சிமலை குப்பம் பகுதியில் நடத்திய சோதனையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்த ராஜா, ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனவே மது பிரியர்கள் செய்வதறியாது கள்ளச்சாராயத்தை நாடி வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை காவல் துறையினரும் ஆளில்லா ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து கள்ளச்சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு: கேரள அரசின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை!