திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கரைப்பூண்டியில் உள்ள தரணி சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. கடந்த வருடம் அரைவைப் பருவத்திற்கான விவசாயிகளுக்குத் தரவேண்டிய 26 கோடி ரூபாய் பணத்தைத் தரக்கோரியும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்றும் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து நண்பகல் கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஆலை நிர்வாகத்தினர் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிலுவைத்தொகையினை மார்ச் 31ஆம் தேதிக்குள் அளிப்பதாகத் தெரிவித்தனர். ஆனால் விவசாயிகளோ மார்ச் 31ஆம் தேதியிட்ட காசோலையினை தருமாறு வற்புறுத்தினர்.
ஆலை நிர்வாகமோ பணமாகத்தான் தருவோம் என்றும் காசோலையாகத் தரமாட்டோம் எனவும் உறுதியாக தெரிவித்தது. இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்போவதாக நடைபயணமாக திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் கரைப்பூண்டி பாலம் அருகே செல்லும்போது காவல் துறையினரால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 'நிலம் எங்கள் உரிமை... இல்லையேல் தீ குளிப்போம்' - பொதுமக்கள் போராட்டம்