திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாக நுழைவு வாயில் முன்பு கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையான 26 கோடி ரூபாயை உடனே வழங்கக் கோரி கறுப்புக்கொடி ஏந்தி 50-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமியிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், “கரும்பு விவசாயிகள் 2018-2019ஆம் ஆண்டு அறுவடை செய்த கரும்பு நிலுவை பாக்கி 26 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும், தரணி சர்க்கரை ஆலை-2 அரசே ஏற்று இயக்க வேண்டும், தரணி சர்க்கரை ஆலை-2 கரும்பு பதிவை செய்யாறு, வேலூர் ஆலைகளுக்கு கரும்பு பதிவுசெய்ய முன்வர வேண்டும்.
தரணி சர்க்கரை ஆலை-2 தரவேண்டிய 2013 முதல் 2017ஆம் ஆண்டிற்கான மாநில அரசு அறிவித்த ஆதார விலையான 65 கோடி ரூபாயை 15 விழுக்காடு வட்டியுடன் தமிழ்நாடு அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது, “கடந்த 40 நாள்களுக்கு முன்பு, நாங்கள் மூன்று நாள்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, 15 நாள்களில் ஆளுநரிடம் பரிந்துரைசெய்து நிலுவைத் தொகையை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். ஆனால், இதுநாள் வரை அந்தத் தொகையை அவர் பெற்றுத் தரவில்லை” என்றனர்.
இதையும் படிங்க: கள் இறக்கும் பானைகளை உடைத்த காவலர்கள் - நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்