திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட மலமஞ்சனூர் கிராம காட்டுப்பகுதியில் வீரபத்திரன் குகைக்கோயில் அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா கட்டுப்பாட காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் வீரபத்திர சாமி திருவிழா நடைபெறவில்லை.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிருந்த வீரபத்திரன் சாமி சிலைகள் உள்பட ஏழு சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தானிப்பாடி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், தானிப்பாடி காவல்துறையினர் மலை குகைக்கோயிலில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட வாணாபுரம் அடுத்த நுக்காம்பாடி பகுதியில் திருடு போன சிலைகள் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வாணாபுரம் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தில் புதைக்கப்பட்டு இருந்த ஐந்து சிலைகளை கைப்பற்றினர்.
சுமார் அரை அடி மற்றும் முக்கால் அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்தது தொடர்பாக இரண்டு நபர்களை வாணாபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை கிராமிய துணை கண்காணிப்பாளர் அஸ்வினி மற்றும் வாணாபுரம் காவல்துறை ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் கும்பகோணம் காட்டுமன்னார் கோயில் அருகே மேலும் சிலைகள் இருப்பதாக கைதான நபர்கள் அளித்த தகவலின் பெயரில், அந்த சிலைகளை கைப்பற்ற காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கு தானிப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் கைது செய்யப்பட்ட இரு நபர்களை வாணாபுரம் காவல்துறையினர், தானிப்பாடி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: கடத்த முயன்ற பொன்னியின் செல்வனின் மகன் காலத்து சிலைகள்... காவல்துறை பறிமுதல்...!