திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். பௌர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. இதுதவிர திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி வரும் 28ஆம் தேதி பௌர்ணமி தொடங்குவதையொட்டி, இன்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது.
அதையொட்டி நந்திபகவானுக்கு, அரிசிமாவு, மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், தயிர், விபூதி, இளநீர், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்திபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கரோனா தொற்று காரணமாக கடந்த பத்து மாதங்களாக பிரதோஷ விழாவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று (ஜன.26) நடைபெற்ற பிரதோஷ விழாவிற்கு அண்ணாமலையார் கோயில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க...எடப்பாடி காளியம்மன் கோயில் குடமுழுக்கு! - முதலமைச்சர் பங்கேற்பு!