திருவண்ணாமலை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் விமல் (28), கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சீனாவிலுள்ள ஷாங்காய் மாகாணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.
இந்நிலையில் சீனாவில் கரோனோ வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதையடுத்து, கடந்த 19ஆம் தேதி சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மூன்று நாள்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அதன் பின்னரே அவரது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்குச் சளி, இருமலுடன் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதையடுத்து பதற்றமடைந்த விமல், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
தனி அறை ஒன்றில் அவர் தங்கவைக்கப்பட்டு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், அவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், சாதாரண தொண்டை வலி, இருமல் போன்றவை மட்டுமே உள்ளது எனவும் அம்மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவிலிருந்து வந்ததால் பாதுகாப்புக் கருதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறார் என்றும், அவருடைய ரத்த மாதிரிகள் சோதனைக்காக மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து ஆய்வு: சென்னையில் புதிய ஆய்வகம்