திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தெருக்கூத்து நாடகக் கலைஞரான இவருக்கு 19, 17 வயதில் மகள்கள் உள்ளனர்.
பழனி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவியும் இரண்டாவது மகளும் இன்று (ஜூன்.21) காலை அத்தியாவசியப் பொருள்கள் வாங்க திருவண்ணாமலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சூழலில், காலையில் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த பழனி, மதியம் குடிபோதையில் விட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் மூத்த மகள் மட்டும் தனியாக இருந்த நிலையில் குடிபோதையில் பழனி, தனது மகள் என்றும் பாராமல் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் மூத்த மகள் அருகில் இருந்த அம்மிக்கல்லால் பழனியைத் தாக்கியுள்ளார்.
இதில் மயங்கி விழுந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பழனியின் மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு!