புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் தலைவருமானவர் ஜகபர் அலி. மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில், ஜகபர் அலி மட்டும் காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ஜகபர் அலி, கடந்த 17-ஆம் தேதி அவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த மினி டிப்பர் லாரி (407) அவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜகபர் அலி இறந்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜகபர் அலி உயிரிழந்ததை அறிந்த 50-க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
மேலும், ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக அதிக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க போராடி வந்தவர் ஜகபர் அலி என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் கிளப்பினர். இதில் காவல்துறையினர் தலையிட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதுவரை ஜகபர் அலியின் சடலத்தை பெற மாட்டோம் என்று உறவினர்கள் உறுதியாக தெரிவித்ததால் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக இருந்தது. மேலும், இது குறித்து திருமயம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: மனைவியை கண்டிக்காததால் மாமனார், மாமியாரை படுகொலை செய்த மருமகன்!
இந்நிலையில், குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ், மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், அவரது ஓட்டுநர் காசி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குவாரி உரிமையாளர் ராமையாவை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அதனை கொலை வழக்காக மாற்றி உள்ள காவல்துறையினர், கூடுதலாக ஒருவரை சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து திருமயம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நான்கு பேரையும் வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உரிமையியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு பேரையும் புதுக்கோட்டை சிறையில் அடைக்க போலீசார் பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி சென்றனர்.
கனிம வளத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக கடுமையாக போராடிய ஜகபர் அலி கொலை வழக்கில், நான்கு பேர் கைதாகியுள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.