மாஸ்கோவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த தம்பதி இருவர் பணமில்லாமல் அவதிப்பட்டு, மனஉளைச்சல் தாங்காமல் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தம்பதியினர் இருவரையும் மீட்டனர்.
இதன் பிறகு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிச்சக்கரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த விக்டர், டாட்டியானா என்ற கணவன், மனைவி இருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் வாடகை கொடுத்து வந்துள்ளனர். தற்போது அவர்கள் ஆறு மாதத்திற்கான சுற்றுலா விசாவில் வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் கொண்டு வந்த பணம் தீர்ந்து விட்டதால் செய்வதறியாது தவித்து மன உளைச்சல் காரணமாக மலைமேல் ஏறி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் ஆளில்லா குட்டி விமானம் மூலம், இவர்கள் இருவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து விரைந்து மலைமீது ஏறி, அவர்களை மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் கீழே அழைத்து வந்தனர்.
அதன் பிறகு, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டது. அதனால், அவர்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இவர்கள் மேலும் எத்தனை நாள்கள் இங்கே தங்கி இருக்கிறார்களோ அதற்கான வாடகை வேண்டாம் என பெரிய மனதுடன் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்' என்றார்.
இதையும் படிங்க... கரோனாவால் தங்குவதற்கு இடமின்றி குகையில் தவித்த சீன நாட்டவர்!