தி.மலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஹலோ திருவண்ணாமலை போலீஸ் என்ற பெயரில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு 99885 76616 என்ற எண்ணில் போன் செய்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் 17ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டுப்பாட்டு அறைக்கு திருவண்ணாமலை தாலுகா மாயங்குளம் கிராமத்தைச் சே்ரந்த 17 வயது சிறுமிக்கு விழுப்புரம் மாவட்டம் தாலுகா கணக்கன்குப்பத்தில் 28ஆம் தேதி குழந்தை திருமணம் நடக்கவிருப்பதாக வாட்ஸ் அப் மூலம் புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்க குழு அமைத்தும், அதே நேரத்தில் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, காவல்துறை, சமூக நலத்துறையினர் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாயங்குளம் கிராமத்திற்கு சென்று குழந்தை திருமணம் நடைபெற இருந்த 17வயது சிறுமியை மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, சமூக நலத்துறை அலுவலர்கள் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை- முக்கிய ஆதாரம் சிக்கியது!