திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் பாதிரியார் ஜான் ரவி (52). கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஜான் ரவிக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், இன்று (ஆக. 29) காலை ஜான் ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பாதிரியாரின் சடலத்தை ஆரணி அடுத்த குன்னத்துர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது, குன்னத்துர் கிராம பொதுமக்கள் திடீரென ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்து ஊரின் உள்ளே சடலத்தை கொண்டு வரக்கூடாது என்று தடுப்பு வேலி அமைத்தனர்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி கிராம காவல் துறையினர், இருதரப்பினரையும் சமரசம் செய்து ஜான் ரவி உடலை கரோனா நடைமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தனர்.