திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திலுள்ள புளியம்பட்டி, ஆண்டிபட்டி, பக்கரிபாளையம், கட்டமடுவு, காயம்பட்டு ஆகிய கிராமங்களிலுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி தீண்டமை ஒழிப்பு முன்னணி, மண்ணுரிமை கூட்டமைப்பு, டாக்டர் அம்பேத்கர் பேரவை ஆகியவற்றின் சார்பில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மண்ணுரிமை கூட்டமைப்பின் செங்கம் பொறுப்பாளர் லட்சுமி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதன்பின்பு போராட்டத்தில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டாட்சியரிடம் அளித்தனர். 2014ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் விதியை மீறி பஞ்சமி நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலமற்ற பட்டியலின மக்களுக்கு அந்த நிலத்தை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தாங்கள் ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி நேரடி நில மீட்புப் போராட்டத்தை நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து பசுமை கண்ட பட்டதாரி!