திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பட்டு அண்ணா நகர் குடியிருப்பு வாசிகள், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பாக நாடழாகானந்தல் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து கருங்கல்பட்டு, சாணிபூண்டி எல்லையில் உள்ள அண்ணா நகர் என்ற பகுதியில் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்காக 22 ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை அமைக்க ராமலிங்கம் என்ற தனிநபர் தனது சொந்த நிலத்தை தானமாக அளித்து அதில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இதனையடுத்து, இந்தப் பகுதியில் சுமார் 143 வாக்குகள் உள்ள நிலையில், இவர்களில் 105 வாக்காளர்கள் நாடழாகானந்தல் கிராமத்தில் வாக்களித்து வருகின்றனர். மீதம் உள்ள 38 வாக்காளர்கள் சாணிப்பூண்டி கிராமத்தில் வாக்களித்து வருகின்றார்கள். மேலும், கடந்த இரண்டரை வருடங்களாக இவர்களது பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் தருவதற்கு சாணிப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கட்ராமன் மறுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை எனவும், உங்கள் வாக்கு நாடழாகானந்தல் பகுதியில் உள்ளது. எனவே, நீங்கள் அங்கு சென்று தண்ணீர் கேளுங்கள் எனவும், உங்களுக்கு தண்ணீர் வேண்டுமென்றால் உங்களது வாக்காளர் அடையாள அட்டையை எனது பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறி இவர்களுக்கு தண்ணீர் தர மறுத்துள்ளார்.
மேலும், தாங்கள் வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு, நெற்களஞ்சியம், ஓடையை தூர்வாருதல், 100 நாள் வேலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியையும் நாடழாகானந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை செய்து தருவதில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமை மாநாடு; பெண்களுக்கு சிறப்பு வசதிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!