திருவண்ணாமலை: பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது.
திருக்கார்த்திகை தீபத்தின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்க்காக https:// annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதள வழியாக வரும் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்டண தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு துவங்க உள்ளது.
பரணி தீப தரிசனத்திற்கு 500 ரூபாய் கட்டணத்தில் 500 நபர்கள் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு 500 ரூபாய் மற்றும் 600 ரூபாய் கட்டணத்தில் 100 மற்றும் 1000 நபர்களுக்கு ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை,கைபேசி எண்,மினனஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை என்றும்,ஒரு ஆதார் சீட்டுக்கு ஒரு பதிவு மட்டுமே என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தாங்கள் அளித்த மின்னஞ்சல் வழியாக கட்டண சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், டிக்கெட் பெற்று கொண்டு பரணி தீபத்திற்கு வருபவர்கள் அதிகாலையில் 3 மணிக்கு மட்டுமே கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.
மகா தீப தரிசனத்திற்கு மாலை 3.30 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:திருவண்ணாமலை திருவிழா: பக்தர்களுக்கு தீபம் பார்க்க நிபந்தனை!