திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான தமிழ்நாடு 'காவலர் பல்பொருள் அங்காடி(Police Canteen) செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் கடந்த ஆண்டு நவ.10 ஆம் தேதி விலை உயர்ந்த 42 இன்ச் டிவி 1, 32 இன்ச் டிவி 2 என மூன்று எல்இடி டிவி மற்றும் 3 செல்போன்கள் கேன்டீன் பூட்டு உடைக்கப்பட்டு திருடப்பட்டது.
எஸ்.பி அலுவலகத்தில் உள்ள கேன்டீனில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் வேலியே பயிரை மேய்ந்த கதை போல் காவலர் ஒருவரே திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
விசாரணையில், கலசப்பாக்கம் அடுத்த அல்லியாலமங்கலம் பகுதியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த சரத்குமார், இவர் கூடுதல் துணை கண்காணிப்பாளருக்கு ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தான் திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதை உறுதி செய்த போலீசார் அவரிடமிருந்து தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!