திருவண்ணாமலை: செங்கம் அருகே உள்ள ஓரந்தவாடி மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி கூலித் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு சௌந்தர்யா, திரிஷா, மோனிஷா, தனுஸ்ரீ, பூமிகா ஆகிய 4 மகள்கள் மற்றும் சிவசக்தி என்ற மகன் உள்ளார். இவர்களது மூத்த மகள் சௌந்தர்யா திருமணம் ஆகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். பழனி தனது மனைவி நான்கு மகள் மற்றும் மகனுடன் மோட்டூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பழனிக்குக் கடன் இருந்து வந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு மதுபோதையில் இருந்த பழனி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பழனி மனைவி வள்ளி, திரிஷா, மோனிஷா, தனுஸ்ரீ, பூமிகா ஆகிய மகள்கள் மற்றும் மகன் சிவசக்தியை வெட்டிவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் பூமிகா மட்டும் ரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ரமணா' பட பாணியில் இறந்த பெண்ணுக்கு சிகிச்சை? சேலத்தில் நடந்தது என்ன?