திருவண்ணாமலை: நாயுடுமங்கலம் கிராமத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார் சரவணன். விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையை சேர்ந்த இவர், நேற்றிரவு (ஜூலை 10) 7 மணிக்கு பணிக்காக பைக்கில் நாயுடுமங்கலம் சென்றார்.
ஆனால் அவர் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, நாயுடுமங்கலம் செல்லும் வழியில் பொற்குணம் அருகே ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கலசப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற கலசப்பாக்கம் காவல் துறையினர், ரத்தக்காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர். தொடர்ந்து, உடற்கூராய்விற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மிளகாய் விற்பனையில் கமிஷன் தருவதாகக்கூறி தொழிலதிபரிடம் ரூ.38 லட்சம் மோசடி; ஒருவர் கைது