திருவண்ணாமலை நகரின் மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நகர் முழுவதும் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்து, பக்ரீத் பண்டிகை திருநாளில் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
தற்போது நாடு முழுவதும் கரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்பதை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திவருகின்றன.
பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு ஈத்கா மைதானத்தில் 5 ஆயிரம் பேர் கூடி தொழுகை நடத்தக் கூடிய இடத்தில், இன்று ஊரடங்கால் ஐந்து பேர் மட்டுமே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தொழுகை நடத்தினர்.
ஈத்கா மைதானத்தில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் கூடுவதைத் தவிர்க்க, காவல் துறையினர் சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.