திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதியிலுள்ள கரியமங்கலம் ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். நீர்நிலைகளில் அதிகளவில் நீரை தேக்கிவைத்து விவசாயத்தை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் குடிமராமத்து பணிகள் மூலமாக சுமார் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
பேயாலம்பட்டு பகுதியைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் என்பவர் விவசாயிகளுக்கு எதிராக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு ஆயக்கட்டு விவசாய சங்க உறுப்பினர்களை ஏரி பகுதியில் அனுமதிக்காமல் குடிமராமத்து பணியை தரமற்ற முறையில் செய்து வருவதாகவும் அதனை தட்டிக் கேட்கும் விவசாயிகளை மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குடிமராமத்து பணியை முழுமையாக முடிக்காமல் கண்துடைப்புக்காக ஏற்கனவே உடைந்த நிலையில் உள்ள ஏரி மதகுகள், கால்வாய்களை அகற்றி புதிய மதகு கால்வாய்களை அமைக்காமல் அதனை சிமெண்ட் கலவை வைத்து மேலோட்டமாக பூசப்பட்டு வருவதாகவும், கரைகளை பலப்படுத்தாமல் ஏரி கரைகள் மீது அரசு அளவீடு செய்த மண் மேடுகளை அமைக்காமல் மேலோட்டமாக மண் கொட்டப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாடு அரசால் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் ஏரி குடிமராமத்து பணி முறையாக செய்யப்படாமல் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் மாதவன் பணத்தை சுருட்டும் நோக்கத்தோடு வேலைகளை செய்து வருவதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை அலுவலர்களும் துணை போவதாகவும் ஏரி ஆயக்கட்டு சங்க விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
சங்கர் மாதவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டும் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுவதும் விவசாயிகளை சமூக விரோதிகள் என வசைபாடி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள், குடிமராமத்து பணி நடைபெற்ற ஏரியில் தூர்வாரி கொண்டிருந்த இயந்திரங்களை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த செங்கம் காவல் ஆய்வாளர் சாலமோன் ராஜா, விவசாயிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்துச் சென்றனர்.