திருவண்ணாமலை அடுத்த சீலப்பந்தல் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தகுந்த இடைவெளியை பின்பற்றி பாஜக விவசாய அணி சார்பாக திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு, விழுப்புரம், கடலூர் வடக்கு மற்றும் தெற்கு உட்பட்ட ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்திற்கான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்றும் சாத்தனூர் அணை தூர்வார வேண்டும், என்றும் அரசு திட்டங்கள் ஆளுங்கட்சி அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
அதன் பின் பேசிய பாஜக விவசாய அணியின் மாநில தலைவர், பல ஆண்டுகளாக கிடப்பில் போடபட்டுள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசானது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசு பெயர்களையும் பாரத பிரதமரின் பெயரையும் குறிப்பிடாமல் செயல்படுத்தி வருவதாகவும் மத்திய அரசு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் மத்திய அரசு பெயரையும் பிரதமர் படத்தினையும் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய 6 ஆயிரம் ரூபாய் திட்டமான பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால், இந்த திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி தலைவர் ஜி கே நாகராஜ் மற்றும் விவசாய அணியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.