திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ரெட்டியாபாளையம் பகுதியில் அடர்ந்த வனம் மற்றும் குன்றுப் பகுதிகள் உள்ளது. இங்கே மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்றவர்கள், புள்ளிமானை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குண்டு காயங்களுடன் தப்பிய புள்ளிமான், உயிருக்கு போராடிய நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துள்ளது. காயங்களுடன் மானைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், காலில் குண்டடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். மேலும் மானை துப்பாக்கியால் சுட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை வேட்டையாடும் சமூக விரோதிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: குடிநீர் தேடி வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு!