திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் புறவழிச்சாலையில், அந்தனூர் பகுதியில் தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தும், திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த டாட்டா சுமோ காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து, பெங்களூரு நோக்கி டாட்டா சுமோ காரில் சுமார் பத்து நபர்கள் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காரில் பயணம் செய்த 4 நபர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 10 நபர்கள் என 14 பேர் செங்கம் அரசு மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.
இந்நிலையில், செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், ஒருவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். இதனால் தற்போது செங்கம் அருகே காரும், பேருந்தும் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த விபத்து குறித்து மேல்செங்கம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காரில் வந்தவர்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தரிசனத்துக்காக வந்து விட்டு, திரும்பி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி செங்கம் அருகே உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் கார் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிலையில், செங்கம் பகுதியில் மற்றொரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலவில் உள்ள ரோவருக்கு என்ன ஆபத்து? - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!