திருவண்ணாமலை: ஆரணி, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ரகு-அஞ்சுகம் தம்பதிக்கு, ரித்விகா (17), சத்விகா (17), ரிஷ்கா (15) ஆகிய மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான ரகு, ஊரடங்கால் பணிக்குச் செல்லமுடியவில்லை.
இதன் காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு பாரதியார் தெருவைச் சேர்ந்த கேஷ்டிராஜா என்பவரிடம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். வாங்கிய கடனை கட்ட முடியாமல் ரகு தவித்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கேஷ்டிராஜா கடனைத் திருப்பிக் கேட்டு அடிக்கடி வீட்டிற்குச் சென்றுவந்துள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று (ஆகஸ்ட் 23) ரகுவிடம் மீண்டும் கடனைக் கேட்கச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கேஷ்டிராஜா, ரகுவின் வீட்டை வெளியிலிருந்து பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, உள்ளே மூன்று பெண் குழந்தைகளுடன், யோகேஷ்வரி என்ற உறவினர் சிறுமியும் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து ரகு, இந்தச் சம்பவம் தொடர்பாக ஆரணி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமிகளை மீட்டனர்.
காவல் துறையின் முதல்கட்ட தகவலில், "ரகு, கேஷ்டிராஜா இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது காவலர்கள் கேஷ்டிராஜாவிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரியவருகிறது.
இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை - காவல் ஆணையர் அலுவலகத்தில் மூதாட்டி ஆர்ப்பாட்டம்