திருவண்ணாமலை மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் பங்க் பாபு (47). இவர், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையிலுள்ள டீக்கடையில் நின்றிருந்தபோது கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முன்னாள் அதிமுக நகர செயலாளர் கனகராஜ் கொலைக்கு பழிவாங்கும் விதமாக பங்க் பாபுவை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள முக்கிய குற்றவாளிகளான வேலூர் தாராபட வேடு பகுதியைச் சேர்ந்த குருவி சுரேஷ் (33), மாங்காய் மண்டி தெருவைச் சேர்ந்த அரி (23), முள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் (19), திருவண் ணாமலை பெரும்பாக்கம் ரோடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (34), கார்த்திக் (25) ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு எஸ்பி அரவிந்த் பரிந்துரை செய்தார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் வெட்டிக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு!