திருவண்ணாமலையில் உள்ள பிரசித்திப் பெற்ற அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் இரண்டு குளங்கள் உள்ளன. ஒன்று பிரம்ம தீர்த்தகுளம், மற்றொன்று சிவகங்கை குளம்.
இந்த இரண்டு குளங்களிலும் கடந்த சில நாட்களாக மீன்கள் இறந்து வருகிறது என்ற தகவலறிந்து, அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "தற்போது பெய்த மழை மற்றும் வெப்பத்தின் ஏற்ற இறக்கத்தின் காரணமாக ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டு மீன்கள் இறந்திருக்கக் கூடிய வாய்ப்புள்ளது.
இருப்பினும் மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக, தண்ணீரின் தரத்தை சோதனை செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது" என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உடன் இருந்தார்.