திருவண்ணாமலை: ஆரணி தொகுதிக்கு உட்பட்ட ஏகாம்பரநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், சந்திரசேகர். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் அருண், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தரக்கோரி சில வருடங்களாக திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் தொடர்ந்து பல முறை மனு அளித்துள்ளதாகவும், ஆனால் தற்போது வரை தனது விண்ணப்பத்தை ஏற்று பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவில்லை என அருணின் தந்தை சந்திரசேகர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து சந்திரசேகர் கூறுகையில், ‘எனக்கு முன்று மகன்கள். எனது இரண்டாவது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளான். எனவே, கடந்த 13 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறான். சில வருடங்களுக்கு முன்பு மருத்துவர் பரிசோதனை செய்து இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என வழங்கப்பட்ட சான்றிதழை மனுவுடன் இணைத்து பழைய மாவட்ட ஆட்சியரிடம் மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்காக கொடுத்தேன். அதற்கு தகுந்த நடவடிக்கை இல்லை.
மேலும், தற்போது உள்ள மாவட்ட ஆட்சியரிடம் அளித்தும் அவர்கள் மாற்றுத்திறனாளி அலுவகத்தில் அளிக்கும்படி அலைக்கழிக்கின்றனர். மேலும், எனது மனுவானது நீண்ட வருடங்களாக நிலுவையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், பயனாளிகள் மனு அளித்து 100 நாளில் மனுக்களின் மீது தீர்வு காண வேண்டும் என “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.
அதன் படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை பெட்டியில் போடும்படி சொன்னார்கள். மனு அளித்து வருடங்களாகியும், இன்னும் அந்த திட்டத்தின் கீழ் தீர்வு காண முடியவில்லை மற்றும் மனு குறித்து நடவடிக்கை கூட எடுக்கவில்லை. கடைசியாக 13 வருடங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண்ணை கேட்டனர். பின்னர், தற்போது வரை மனு குறித்த தகவலோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை.
மேலும், மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தும் இதுவரை எந்த வித பயனும் கிடைக்காத காரணத்தினால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார். மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், தனது மகனுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வழிவகை செய்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:மேற்கு வங்கத்தில் பிறந்த குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்றதாக தாய் கைது!