திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த புதிய ஒழுங்கு முறை விற்பனைக் கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுபாஷ் சந்தர் தலைமையில் இன்று (நவ.8) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ’வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், ஏரிகளின் நிலை குறித்து விவரம் அறிவது விவசாயிகளுக்கு அவசியமான ஒன்றாகும். இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு வராதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தவிர வருவாய்த்துறையைச்சார்ந்த வட்டாட்சியரும் வரவில்லை. எனவே, 32 துறைகள் கலந்துகொள்ள வேண்டிய இந்த கூட்டத்தில் பல துறைகளின் அலுவலர்கள் வராத காரணத்தால், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறோம்’ எனக்கூறி முழக்கமிட்டவாறு வெளியேறினர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்து முழக்கமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் உழவர் பேரியக்கம் ரமேஷ், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழு அரிதாசு, சின்ன சேத்பட் ரிஸ்வான், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ராதாகிருஷ்ணன், குறிப்பேடு முருகன், பால்ராஜ், அப்துல்காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்' - தமிழ்நாட்டின் புதிய சரணாலயம் அறிவிப்பு