திருவண்ணாமலை : மத்திய அரசு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் கிசான் திட்டத்தில் வழங்குவது போல், மாநில அரசு 12 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பலூன் விட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் திரண்டனர். மத்திய அரசு வழங்குவதுபோல மாநில அரசும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பிய விவசாயிகள் பலூன் மற்றும் ரூபாய் நோட்டுக்களை கொண்டு, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், திமுக ஆட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் என்பது காற்றில் பறக்கும் பலூன் போன்று உள்ளதாகவும் இந்த திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 7 லட்ச ரூபாய் அளவிற்கு விவசாயிகள் பலனடையவர்கள் என்ற நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டம் முழுமை அடையாமல் மாதம் 200 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆகவே ஒருங்கிணைந்த கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் என்பது போலி பித்தலாட்டம் செய்யும் திட்டம் என்றும்; இதுதான் விவசாயிகளை ஏமாற்றுகிற திராவிட மாடல் திட்டமா என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். அரசு அறிவித்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்காமல் பலூன் போல பறந்து செல்வதாகக் கூறிய விவசாயிகள் கையில் வைத்திருந்த பலூன்களை பறக்க விட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மாதந்தோறும் வெறும் 200 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகக் கூறிய விவசாயிகள் கையில் 200 ரூபாய் நோட்டுகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் மொத்த விவசாய பொருள் உற்பத்தி மதிப்பு 70 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும், தனிநபர் ஆண்டு வருமானம் 7 லட்ச ரூபாய் என்ற அளவில் பெற வழிவகை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு கலைஞர் வேளாண் வளர்ச்சி சிறப்பு திட்ட நிதியாக 16 கோடியே 52 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு 8 கோடியே 26 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்து 4 லட்சத்து 10 ஆயிரம் பட்டாதாரர்கள் பயன்பெற அறிவித்தார். ஆனால் தற்போது 200 ரூபாய் மட்டுமே விவசாயிகள் பெற்று வருவதாகக் கூறினர்.
அதிலும் 50 சதவீதம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் தொழில்துறை, சேவைத்துறை பங்களிப்பு 91 சதவீதம் வேளாண் துறையின் பங்களிப்பு 9 சதவிகிதம் வருமானம் என்றும்; இதிலும் மதிப்புக் கூட்டுத் தொழில் வேளாண் இயந்திரம் இடுபொருள் விற்பனை தொழில் ஐந்து சதவீதம் எஞ்சிய நான்கு சதவீதம் வருமானம் வேளாண் சாகுபடி மூலம் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல, மாநில அரசும் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க : வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, ஆதி திராவிட நலத்துறையில் விடுதி கட்டடங்கள் - முதலமைச்சர் துவக்கி வைப்பு!