திருவண்ணாமலை அடுத்த கருந்துவாம்பாடி கிராமத்தின் விளை நிலத்தில் விவசாயம் செய்து பல விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். விவசாயிகள் விளை நிலத்தில் பத்திற்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சிமெண்ட் இல்லாமல் வெறும் கம்பிகளால் நின்று கொண்டிருக்கின்றது. இதுகுறித்து, மின்வாரிய துறையிடம் விவசாயிகள் பலமுறை எடுத்துக்கூறியும் மின்சாரத் துறை ஊழியர்கள் பழுதான மின் கம்பங்களை மாற்றுவதற்கான தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர், "எதற்கெடுத்தாலும் மின்வாரிய துறையைச் சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கின்றனர். இதுவரை புதிய கம்பம் வைத்தபதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும் கம்பம் எடுத்துவர டிரான்ஸ்போர்ட் சார்ஜ் பெற்றுக் கொண்டுள்ளனர். பின்னர் குழிதோண்டி வைக்குமாறும் கூறிச் சென்றனர், ஆனால் அதனை சீர் செய்ய ஊழியர்கள் எவரும் வரவில்லை. தோண்டிய குழியில் பல மாதங்களாகியும் அலுவலர்கள் வராத காரணத்தால் அக்குழியில் கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது. இடி, காற்று, மழை காலங்களில் என்ன செய்வது என்று தெரியாமல், உயிருக்கு பயந்து அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்றார். மேலும், எங்களின், துயர் தீர்ப்பதற்கு மின்சார வாரியத் துறை அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பங்களை மாற்றி விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்க வேண்டும்" என்றார்.