திருவண்ணாமலை: வேங்கிக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் உள்ள குளக்கரை மேட்டுத்தெருவில் தமிழ்நாடு அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வேங்கிக்கால் ஊராட்சி சார்பில் ரூபாய் 3.70 லட்சம் மதிப்பீட்டில் 82 மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் சிமெண்ட் கற்கள் கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிமெண்ட் சாலையின் மையப்பகுதியில் இரண்டு ஸ்டே கம்பிகள் இருப்பதால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த வழியாக செல்லும் போது இரவு நேரங்களில் சாலையின் நடுவே உள்ள ஸ்டே கம்பிகளைக் கவனிக்காமல் பலமுறை கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தாமல் மக்கள் பயன்பாடு பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவசரகதியில் திட்டத்தை வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் செயல்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகச் சாலைக்கு நடுவே கை பம்புடன் தார் சாலை அமைத்தல், சாலைக்கு நடுவே மின் கம்பத்தை அகற்றாமல் சாலை போடுதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவம் அதிகாரிகளின் அலட்சியத்தால் நடைபெற்ற நிலையில், தற்போது திருவண்ணாமலையில் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் பேவர் பிளாக் சாலை அமைத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேமுதிக மாவட்டச் செயலாளரை மாற்றக்கோரி சொந்தக் கட்சியினரே ஆர்ப்பட்டம்: ஏன்?