திருவண்ணாமலை காந்தி சிலை அருகே அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் திறமையான பிரதமர் நமக்கு தேவை. வலிமைமிக்க ,திறமைமிக்க, உறுதிமிக்க பிரதமர் என்று பார்க்கிற போது தற்போது பிரதமராக இருக்கிற நரேந்திர மோடிதான் நமக்கு மீண்டும் பிரதமராக வரவேண்டும் என ஒட்டுமொத்த இந்திய மக்களும் எண்ணுகிறார்கள்.
நம்முடைய கூட்டணியைப் பார்த்து திமுக தலைவர் ஸ்டாலின் மிரண்டு போயுள்ளார்.மதிமுக தற்போது திமுக சின்னத்தில் போட்டியிடக்கூடிய அளவிற்கு கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாக மாறிப்போயுள்ளது. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக நிர்வாகிகள் சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு ஜாமீன் வாங்குகிறார்கள் என்று சொன்னால், இவர்களுக்கும், இந்த கூலிப்படைகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா?
இந்தியாவிலேயே கூலிப்படைக்கு ஜாமீன் கொடுக்கும் கட்சி திமுக மட்டும்தான். திமுக மக்கள் விரோத இயக்கம். என்னைப் போல லட்சக்கணக்கான விவசாயிகள் எதிர்காலத்தில் பதவிக்கு வருவார்கள். 15 ஆண்டு காலமாக மத்தியில் ஆட்சி செய்த திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.எனவே திமுகவின் அறிக்கை பொய்யான தேர்தல் அறிக்கை.
ஸ்டாலின் எங்கு சென்றாலும் பொய்களை மூட்டை, மூட்டையாக அவிழ்த்து விடுகிறார். பொய் பேசுவதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது ஸ்டாலினுக்கு கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏழைகளுக்கு 2000 ரூபாய் வழங்குகிற திட்டத்தைக் கூட திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. எனவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மரண அடி கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.