திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியிடம் திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு 8,000 மனுக்களுக்கு நேரடியாக அந்தந்த மாவட்டம் மற்றும் ஒன்றிய திமுக நிர்வாகிகள் சார்பாக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு விட்டது. தற்போது 9,000 மனுக்களை மாவட்ட ஆட்சியர் மூலமாக நிவாரண உதவிகள் வழங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் அமைச்சர் காமராஜ், அரசியல் நாடகம் குறித்து பேச தகுதியில்லாதவர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குகிறது. பருப்பில் ஊழல், நெல்லை பதப்படுத்துவதில் ஊழல். இவ்வளவு மோசமாக ஊழல் செய்து, மக்கள் வரிப்பணத்தில் அரசியல் நாடகம் நடத்துபவர்கள் அதிமுகவினர் தான்” என்றார்.