திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட, புதிய கட்டடத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், கட்டடத்தில் மின்சார வசதி இன்மை, ஜெனரேட்டர்கள் பழுது என கடந்த ஆறு மாதங்களாக அங்கு செயல்பட்டு வந்த அவசரப் பிரசவம் மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் நடைபெறாமல் இருந்தது. பிரசவத்திற்காகவும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காகவும் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கர்ப்பிணிப் பெண்களையும் தாய்மார்களையும் அனுப்பி வந்தனர்.
இந்நிலையில், சட்டப்பேரவைத் துணை சபாநாயகரும் கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கு.பிச்சாண்டி இன்று (மே.18), அந்த அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும்; போதிய வசதிகளை செய்து தரவும் மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி: இருதினங்களில் தொடங்கும்!