திருவண்ணாமலை: கீழ்பென்னத்தூர் தொகுதிக்குட்பட்ட, நீலந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் சுமார் 35 மாணவர்களின் பாதுகாப்புக் கருதி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.5 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த சுற்றுச் சுவற்றினை நீலந்தாங்கல் ஊராட்சி மன்ற திமுக தலைவர் மணியின் உத்தரவின் பேரில், திமுக பிரமுகர்களான பாரதி, வெங்கட், ஜெயவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இடித்து தள்ளியதால், இந்தச் செய்தி வெளியிடப்பட்டு அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டு, மீண்டும் சரிசெய்யப்பட்டது. தற்போது பள்ளி அமைந்துள்ள தெருவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த சுற்றுச்சுவர் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதாகக் கூறி மக்கள் வரிப்பணத்தில், சுமார் 5.83 மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பள்ளி மதில் சுவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோரிடம் தெரிவிக்காமலும், சுவற்றை இடிக்க எந்தவித உத்தரவின்றியும், கீழ்பென்னத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் இடிக்கச் சொன்னதாக கூறி, நேற்று சில நபர்கள் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பள்ளியின் சுற்றுச்சுவரை இடிப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், பொதுமக்கள் சொல்வதைக் கேட்காமல் பள்ளியின் சுற்றுச்சுவரை சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். எனவே, பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளிச் சுவரை இடித்த இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள கிடாம்பாளையம் கிராமம், ஐயப்பன் நகரில் 8 லட்ச ரூபாய் செலவில் தரம் இன்றி அமைக்கப்படும் “காலை உணவு திட்டத்தின்” கீழ் கட்டப்பட்டு வரும் கட்டட பில்லர்களை வெறும் கைகளால் உலுக்கி கான்கிரீட் கலவை மணல் போல் கொட்டும் நிலையை அப்பகுதி மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று 6 லட்சம் மதிப்பில் மாணவர்களின் பாதுகாப்புக்காக மக்கள் வரிப்பணத்தில் தொடக்கப் பள்ளிக்கு கட்டிய சுற்றுச் சுவரை சிலர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு சாலை அமைக்கும் பணியின் போது அலட்சியமாக இடித்து தரைமட்டமாக தள்ளிய நிகழ்வு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் பணிபுரியும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களாக பணி புரிபவர்கள் தெரிவிக்கும் போது, “மாணவர்கள் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இடம் விரிவுபடுத்தி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால், கட்டும் போது ஒன்று தெரிவிக்கவில்லை. தற்போது வேலை முழுமையடைந்த பின்னர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, யாரிடமும் அனுமதியும் பெறாமல் இடித்துள்ளனர். ஒரு தனிமனிதரின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுத்தால், அதில் குழந்தைகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி சுற்றுச்சுவர் இடித்ததற்கு உரிய காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். மேலும் இச்செயல் வேண்டுமென்றே செய்த செயல், சாலை விரிவுப்பணி என்பது உண்மை காரணம் இல்லை” என கொந்தளித்தனர். மேலும், இந்த ஊரைச் சேர்ந்த ஏழை பள்ளி மாணவ, மாணவிகள் இந்த தொடக்க பள்ளியில் படிக்கக் கூடாது என்ற நிலையை இந்த ஊரை சேர்ந்த சில நினைக்கின்றார்களோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ED Raid: லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!