திருவண்ணாமலை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக அவசர ஊர்தி சேவையளித்து வரும் யோபு என்பவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் யோபு. இவர் கடந்த 15 வருடங்களாக வந்தவாசி அரசு மருத்துவமனை எதிரில் 4 அவசர ஊர்திகளை வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரிடம் உள்ள அவசர ஊர்தி வாகனங்கள் இரண்டில் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளது.
இந்நிலையில், தற்போது வந்தவாசி பகுதியில் கரோனா நோய்த் தொற்று அதிகளவில் பரவி வருவதால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த விதமான செலவும் இன்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், யோபு தனது வாகனங்களை கரோனா நோயாளிகள் மட்டும் இலவசமாக பயன்படுத்திகொள்ள அனுமதி வழங்கியுள்ளார்.
இதையடுத்து வந்தவாசி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் யாராவது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அவர்களை உடனடியாக யோபு நேரடியாக வீட்டிற்குச் சென்று இலவசமாக தனது அவசர ஊர்தியில் அழைத்துக் கொண்டு, எந்த அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமோ, அங்கு கொண்டு செல்கிறார்.
இவருடைய இத்தகைய சேவை வந்தவாசியோடு மட்டும் நின்றுவிடாமல், மேல் சிகிச்சைக்காக கரோனா நோயாளிகளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் அழைத்து செல்கிறார்.
இவரின் இந்த மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.